திருச்சியிலுள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித், கடந்த 25ஆம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கும்போது, அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். கிணற்றில் இருந்து வெளியே குழந்தையை மீட்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பின் 29ஆம் தேதி அதிகாலையில் சுஜித்தின் உடலை மீட்புக்குழு மீட்டது.
சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதுமட்டுமல்லாமல் பல அரசியல் தலைவர்களும் சுர்ஜித்தின் குடும்பத்திற்கு நிதி வழங்கினார்கள்.
இந்நிலையில் முதலமைச்சர் அறிவித்ததைபோலவே, தமிழக அரசு நிவாரணமாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சுர்ஜித்தின் பெற்றோரிடம், திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு, “குழந்தை சுஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கும். குழந்தை உடலை மீட்கவே இல்லை என்று பலரும் வதந்தி பரப்பி வரும் நிலையில், குழந்தை சுஜித்தின் உடலில் இருந்து திசுக்கள் எடுக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.