இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1,372ஆக உயர்ந்துள்ளது. மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் கரோனா பரிசோதனை பி.சி.ஆர். கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு வந்ததால் முடிவுகள் வர நாள்கணக்கில் ஆனது. ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு சோதனை கருவி மூலம் பரிசோதனை செய்தால் அரை மணி நேரத்தில் முடிவுகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு நிறைய பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம். சோதனை முடிவுகள் விரைவாக தெரிந்தால்தான், இந்த வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதை தடுக்க முடியும். இதை விரைந்து தமிழகத்திற்கு தர வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. தற்போது ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு வந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளின் மூலமாக சேலத்தில் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன.
இதற்கிடையில் ரேபிட் டெஸ்ட் கருவிகளின் விலை எவ்வளவு? தமிழ்நாடு எத்தனை கருவிகளை வாங்கியுள்ளது? என்ற தகவலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தமிழக அரசிடம் வலியுறுத்தியிருந்தன. இந்நிலையில், மத்திய அரசு நிர்ணயித்ததன்படி, ஒரு ரேபிட் டெஸ்ட் கருவியை ரூ.600க்கு வாங்கியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.