வேலூர் மக்களவை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக ஆம்பூர் வருகை தந்த மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி மீது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த எதிர்ப்பு அலை இப்போதும், அதே நிலையில் தான் உள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் இரண்டு மாதங்களாக நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு போதிய அவகாசம் அளிக்காமல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி வருகிறார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து சொல்வதற்கு குறுகிய காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பன்முகத்தன்மை மட்டும் இல்லாமல் ஏழை எளிய மக்களின் கல்வியை பறிக்கும் வகையிலும், கல்வியை ஒரு வியாபாரமாக மாற்றக்கூடிய வகையில் இந்த புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தகவல் பெறும் உரிமை சட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
முத்தலாக் சட்டத்தை கடந்த முறை மோடி பிரதமராக இருந்த போது நாடாளுமன்றத்திலே மூன்று முறை அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட்டது. இப்போது அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முத்தலாக் சட்டத்தை சட்டவிரோதம் என்று கூறியதே தவிர, தலாக் சொல்லக்கூடிய கணவன்மார்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசும் போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நாடு முழுவதும் 463 முத்தலாக் வழக்குகள் பதிவாகியுள்ளதாக என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசு மக்கள் நலனுக்கும் தமிழ் நாட்டின் நலனுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது.
தேர்தல் விதி மீறல் என்றால் மண்டபத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டுமே தவிர மண்டபத்திற்கு சீல் வைத்த வரலாறு தமிழ்நாட்டிலேயே இப்போது தான் நடந்துள்ளது. அதிமுக வேட்பாளரின் தோல்வி பயத்தால் தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்தி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
முத்தவல்லிகளுடன் ஆலோசனைக்காக அந்த மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வழியாக வந்த திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளே வந்துள்ளனர். வாக்கு சேகரிப்பதற்காக பல்வேறு சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியவரை நேரில் சந்திக்கின்றோம் அதையெல்லாம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் என கருத முடியும்மா? ஒரு தேநீர் கடைக்குச் சென்று ஒரு தேனீர் அருந்திவிட்டு அங்குள்ள மக்களிடம் வாக்கு கேட்டால் அந்த தேனீர் கடைக்கு சீல் வைத்து விடுவார்களா? சீல் வைத்தது ஒரு அராஜக நடவடிக்கை இதை சட்டரீதியாக அவர்கள் எதிர் கொள்வார்கள்.
லோக்சபாவில் திமுக உறுப்பினர்கள் என்.ஐ.ஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் அதற்கு முன்பாக திமுக உறுப்பினர் ராசா இந்த சட்டத்தை எதிர்த்து பேசினார். அதற்கு பின்னர் அவர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். அனைத்து அரசியல் கூட்டமைப்பின் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலின், அறிவாலயத்தில் சந்தித்து என்.ஐ.ஏ சட்டத்திற்கு திமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளோம். அந்த சட்டம் எப்படி எல்லாம் முஸ்லீம் இளைஞர்கள் மீது ஏவுவார்கள் என்பது குறித்து அவரிடம் விவரித்தோம், அதன் பிறகு அவர் பாஜக அரசு அரசியல் ஆதாயத்துக்காக என்.ஐ.ஏ சட்டத்தை பயன்படுத்தி இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்வதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். என்று ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.