
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்த்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் திரைப் பிரபலங்கள் பலரும் விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். காலை முதலே, பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத் திடலில் இருந்து தொடங்கி பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை கொண்டுவரப்பட்டது.
அங்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இறுதிச் சடங்கில் மா. சுப்ரமணியன், தா.மோ. அன்பரசன், கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் டி.ஆர். பாலு எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பில், மறைந்த விஜயகாந்த்திற்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. அதன்பிறகு, குடும்ப முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், மறைந்த விஜயகாந்த் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.