காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு, 03/06/2021 அன்று நிலவரப்படி 97.13 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 61.43 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நடப்பாண்டு (2021- 2022) தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து வரும் ஜூன் 12- ஆம் தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதனால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜூன் 12- ஆம் தேதி அன்று மேட்டூர் அணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.