கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு செய்தியை கொண்டுசெல்ல வீடுவீடாகச் சென்று மக்களை சந்திக்கவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக பதவி வகித்து வரும் எல். முருகன் பாஜகவின் தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டார். இன்று சென்னையில் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.
பின்னர் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக மாநிலத் தலைவராக என்னை நியமித்துள்ள ஜே.பி.நட்டா, அமித் ஷா, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அதிக அளவில் படித்த இளைஞர்கள், மாணவர்கள் பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்களை அரவணைத்து மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின்படி கட்சியை கொண்டு செல்ல உள்ளோம் என்றார்.
இதனைத்தொடர்ந்து மார்ச் 20ம் தேதி - ஏப்ரல் 5ம் தேதி வரை கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு செய்தியை கொண்டுசெல்ல வீடுவீடாக சென்று மக்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், அரசியல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் வரலாம். எங்களுடைய அரசியல் இலக்கை நோக்கிதான் நாங்கள் செல்வோம். நமது நாடு ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அவரவர்களுக்கு கொள்கை இருக்கும். எங்கள் கொள்கை மக்களை நோக்கிப் போக வேண்டும் என்பதே என்று கூறினார்.