சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் உரையாற்றிய போது, அவரது செயலாளர் ராஜகோபால் பேரவைக்குள் அமர்ந்திருந்தது சர்ச்சையானது. இது குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது திமுக! ராஜகோபால் அமர்ந்ததில் சபை மரபு மீறப்பட்டதாக குற்றம்சாட்டினார் துரைமுருகன்.
இந்த நிலையில் இது குறித்த விவாதங்கள் தலைமைச்செயலக அதிகாரிகள் மத்தியில் எதிரொலிக்கும் நிலையில், இது பற்றி பேரவை செயலக வட்டாரங்களில் விசாரித்த போது, "முதல்வரின் செயலாளர்கள், அவரது உதவியாளர்கள் சபைக்குள் அமர முடியாது. அமைச்சர்களின் செயலாளர்களுக்கும் உதவியாளர்களுக்கும் இதே நிலைதான். மேலும், தலைமைச்செயலாளர் உள்பட அனைத்து துறை செயலாளர்களும் கூட சட்டசபைக்குள் வரக்கூடாது; அமரக்கூடாது. அதிகாரிகள் அமரும் இடத்தில் தலைமைச் செயலாளரும் துறையின் செயலாளர்களும் அமரலாம். அதேபோல, உதவியாளர்களோ "லாபி"யில்தான் அமரலாம்.
முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சட்டசபை ஓ.ஏ. க்கள் மட்டுமே பேரவைக்குள் செல்ல முடியும் என்பதே பேரவையின் விதி. இந்த விதி கவர்னரின் செயலாளருக்கும் பொருந்தும். சட்டசபையில் முந்தைய கவர்னர்கள் உரையாற்றிய போது, அவரது செயலாளர்கள் அதிகாரிகள் வரிசையில் தான் அமர்ந்தனர். வேண்டுமானால் தலைமைச்செயலருக்கு அருகில் அமர முடியும். யாரும் பேரவைக்குள் அமர்ந்ததில்லை. முதன் முறையாக சட்டசபைக்குள் தனி நாற்காலியில் கவர்னரின் செயலாளர் அமர்ந்தது பேரவையின் மரபை மீறிய செயல்" என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.