![tamilnadu assecmbly cm speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/6EzB7olhpbepWC6YtAkZY22uGdohi6EV8-iSVsPbO28/1600239071/sites/default/files/inline-images/tn%20assembly_0.jpg)
சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 14- ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று சட்டப்பேரவை கூடியபோது, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையின் விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். பேரவையில் முதல்வர் கூறியதாவது, "தமிழகத்தில் வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டில் இருந்து 10 ஆண்டாக உயர்த்த மத்திய அரசு பரிந்துரை செய்யப்படும். பெண்களை பின் தொடர்வோருக்கான தண்டனையை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டாக உயர்த்தவும் மத்திய அரசு பரிந்துரை செய்யப்படும். 18 வயதுக்குட்பட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தினால் ஆயுள் தண்டனை தர பரிந்துரை செய்யப்படும். வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படும்; புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் இந்த ஆண்டே செயல்படும்" இவ்வாறு முதல்வர் கூறினார்.
இதனிடையே திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், "கலைஞர் கொண்டு வந்ததால் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை அரசு பிரிக்கிறதா? திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டால் அதே பெயர் இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "கல்விக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவே பல்கலைக்கழகம் பிரிக்கப்படுகிறது. விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் நலன், நிர்வாக வசதிக்காக பல்கலைக்கழகம் பிரிக்கப்படுகிறது. துரைமுருகன் குறிப்பிட்டதுபோல தமிழக அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை" என்றார்.