தமிழ்நாட்டில் தற்போது இளைஞர்களின் மக்கள் நலப்பணிகள் சிறப்பாக உள்ளது. குளம், ஏரி, வரத்துவாரிகளை அரசாங்கம் சீரமைக்காத நிலையில் இளைஞர்கள் சொந்த செலவில் சீரமைப்பு செய்து சமூகப்பணி செய்து வருகிறார்கள்.
இளைஞர்களின் இந்தப் பணியை கிராம மக்களும் ஆட்சியர்களும், நீதிபதிகளும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் ஏனோ அரசாங்கம் இந்த இளைஞர்களை பாராட்ட மறந்ததுடன் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுங்கள் என்ற அவர்களின் சில கோரிக்கைகளை கூட ஏற்க மறுத்து வருகிறது. மற்றொரு பக்கம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியையும் செய்து வருகிறார்கள் இளைஞர்கள்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சாணாகரை கிராமத்தில் சமூகப்பணிக்காக இணைந்த இளைஞர்கள் மருதம் அறக்கட்டளையை உருவாக்கி தங்கள் பணிகளை தொடங்கியுள்ளனர். முதல் பணியாக கிராமத்தில் உள்ள குளங்கள், ஆற்றங்கரைகளில் சுமார் 2 ஆயிரம் பனைவிதைகளை நட்டனர். தொடர்ந்து சாலை முழுவதும் மா, பலா, மருதம், வாகை, என்று நாட்டு மரக்கன்றுகளை நட்டு அதற்கு கூண்டுகளை அமைத்ததுடன் கன்றுகளை வளர்க்க தண்ணீர் ஊற்ற டேங்கர் வசதியும் செய்துள்ளனர்.
விழாவில் உள்ளூர் பெரியவர்கள் இளைஞர்களை வாழ்த்தி களம் காண அனுப்பி வைத்தனர். வெளியூர், வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள் தங்கள் கிராமம் வளர இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். சாணாகரை இளைஞர்களை பாராட்டுவோம்.. அடுத்தடுத்த கிராமங்களிலும் இப்பணிகள் தொடர்ந்தால் நல்லது.