Skip to main content

பா.ஜ.க.வை ஸ்டாலினால் தடுக்க முடியாது... குற்றாலத்தில் தமிழிசை

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
tamilisai soundararajan


நெல்லை மாவட்டத்தின் குற்றாலம் நகரில் பா.ஜ.கா.வின் நெல்லை மாவட்டத் தலைவர் குமரேச சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் முன்னிலை வகிக்க, மேலப்பாவூர் சிவநாதன் தலைமையில் நடந்த தேவேந்திரகுலவேளாளர் இணையும் நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி வழியாக விமானத்தில் வந்தார் தமிழக பா.ஜ.க.வின் தலைவரான தமிழிசை சௌந்திர ராஜன்.
 

நிகழ்ச்சியில் பா.ஜ.க.வில் இணைந்தவர்களுக்கான உறுப்பினர் அட்டையை வழங்கிய தமிழிசை சௌந்திரராஜன் பின்னர் பேசுகையில்,
 

தமிழகத்தில் மாற்றம் தேவை. நல்ல தண்ணீர் உள்ளிட்ட மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களை பா.ஜ.க. தான் தந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க. வந்தால் நல்லது தான் நடக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். நம்பியாறு, கருமேனியாறு திட்டங்களை நிறைவேற்றியிருந்தால் தாமிரபரணி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்காது. தமிழகத்தில் காவிமயத்தைப் பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள். அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் பதட்டத்துடன் காணப்படுகிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் என்றாலே பா.ஜ.க. தான். பெண்களுக்கான நலத்திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
 

 

 

தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தர நாம் தீவிரமாகப் பாடுபடுவோம். தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் பா.ஜ.க. சார்பில் வாழ்த்து சொல்லப்பட்டது. இருந்த போதிலும் ஸ்டாலின்  இந்தியா முழுவதும் காவிமயமாவதைத் தடுப்போம் என்கிறார். ஸ்டாலின் நினைத்தாலும் பா.ஜ.க.வைத் தடுத்து விடமுடியாது. தமிழகத்தின் எல்லையைத் தாண்டினாலே அங்கீகாரம் இல்லாத நிலையில். தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.
 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானத்தில் வந்து கொண்டிருந்தார் தமிழிசை. அது சமயம் அதே விமானத்தில் அவரது இருக்கையின் பின்புறம் 3ம் என் இருக்கையில் அமர்ந்திருந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டு கையை உயர்த்தி பா.ஜ.க.வுக்கு எதிராக கோஷம் போட்டுள்ளார். அவ்வாறு கோஷம் போட்ட பெண் தூத்துக்குடி 3வது மைல் பகுதியைச் சேர்ந்த கந்தன் காலனியிலுள்ள ஓய்வு பெற்ற அரசு டாக்டரான அந்தோணிசாமியின் மகள் லூயிஸ் சோபியா என்பதும், அவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்ப மேற்கொண்டு வருபவர் என்பதும் பின்னர் விமான நிலைய பாதுகாப்பு படையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
 

 

 

இதன் பின் விமானத்திலிருந்து இறங்கிய சோபியா நடைபாதையில் செல்லும் போதும் பா.ஜ.க.வை விமர்சித்து கோஷமிட்டுள்ளார். இதனால் தமிழிசையும் அவரை வரவேற்க வந்த பா.ஜ.க.வினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து விமான நிலைய வரவேற்பு அறையிலும், தமிழிசையும் சோபியாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் நித்யாவிடம், தமிழிசை புகார் செய்ய, பின் அந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் எம்.சி.பி. சட்டப்படி சோபியா கைது செய்யப்பட்டு தூத்துக்குடி ஜே.எம். 3வது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உடல்நிலைக் கோளாறு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சோபியா தரப்பில் உடனடியாக ஜாமீன் கோரப்பட்டுள்ளது.
 

tamilisai soundararajan

இதனிடையே தனது மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழசை மற்றும் 10 பேர்கள் மீது புதுக்கோட்டை போலீசில் சோபியாவின் தந்தை புகார் கொடுத்திருக்கிறார்.
 

இது தொடர்பாக தமிழசை சௌந்திர ராஜன் சொல்லுவது, அந்தப் பயணி, விமானத்தில் வரும் போதே பிரதமர் மோடியையும், என்னையும் எதிர்த்து கையை உயர்த்தி கோஷமிட்டபடி வந்தார். அதற்கு நான் ஒன்றும் பேசவில்லை. தரையிறங்கி வரும் போது கூட அந்தப் பெண் எதிர் கோஷமிட்டபடியே வந்தார். அதை நான் கண்டித்தேன். எனக்கு பேச்சுரிமை இருக்கிறது என்றார். பேச்சுரிமை இருக்கலாம். ஆனால் எந்த இடத்தில் பேச வேண்டும் என்பது தெரிய வேண்டும். விமானத்திலேயே அந்தப் பெண் இப்படிக் கோஷம் போட்டது என்றால் அந்தப் பெண்ணின் பின்னணி பற்றி விசாரிக்க வேண்டும். நான் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
 

இது தொடர்பாக மேலும் விசாரிக்கையில் மாணவி சோபியா புதுக்கோட்டைப் பக்கம் உள்ள தட்டப்பாறையைச் சேர்ந்தவர் என்று அவர் கனடாவில் பி எஸ் சி பௌதீகம், கெமிஸ்ட்ரி பட்டம் படிப்பு முடித்த பின் ஆராய்ச்சியில் பிஎச்.டி. முடித்து அங்கு ஆய்வு சமர்ப்பித்து விட்டு நான்கு வருடங்களுக்குப் பின்பு தற்போது நாடு திரும்பியிருக்கிறார். சோபியா தமிழகச் செய்திகளை வெப்சைட்டுகள் மூலமாகத் தெரிந்து வைத்திருப்பவராம். 

 

 


 

சார்ந்த செய்திகள்