பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு என்ற நிகழ்வானது கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி (25.06.2022) அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் துவக்கி வைக்கப்பட்டது. கடந்த 2022-23 கல்வியாண்டில் அரசு பள்ளியில் பயின்று 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 3 லட்சத்து 30 ஆயிரத்து 628 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு உயர்கல்வி வழிகாட்டுதலின் மூலமாக 2 லட்சத்து 43 ஆயிரத்து 710 மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், சட்டம், பாலிடெக்னிக் மற்றும் இதர உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர் நிகழ்வாக விளையாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கோயம்புத்தூரில் 2024 ஆண்டுக்கான ‘கல்லூரிக் கனவு 2024’ நிகழ்வானது கடந்த பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி (29.02.2024) தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று (08.05.2024) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான கல்லூரிக் கனவு - 2024 மாவட்ட அளவிலான நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து உரையற்றினார். இந்நிகழ்ச்சியில் வளர்ச்சி ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஜெ.குமரகுருபரன், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அரசு செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது, உயர்கல்வித் துறை இயக்குநர் செ.கார்மேகம், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசுகையில், “புதுமைப் பெண் திட்டத்திற்கு பின் 20 சதவிகிதம் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. உயர்கல்வியில் மாணவர்கள் கட்டாயம் சேர வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் கல்லூரி கனவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 100 % உயர்கல்வியில் மாணவர்கள் சேர வேண்டும் என்பது தான் நோக்கம். கடந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் இந்த முயற்சியால் கூடுதலாக கல்லூரியில் சேர்ந்துள்ளனர். எத்தனை மாணவர்கள் உயர்கல்வியில் சேராமல் உள்ளனர் என்பதை கண்டுபிடித்து, அனைவரையும் கல்லூரியில் சேர்க்க என்னென்ன வழிகள் உள்ளன என்பது குறித்து எடுத்துரைக்கபடும்” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உயர்கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டமானது 2024-25 ஆம் கல்வியாண்டில் ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவது தமிழ்ப் புதல்வன் திட்டத்தித்தின் நோக்கம் ஆகும்.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் மாதம்தோறும் மாணவர்களுக்கு ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.