தமிழ்நாட்டின் அதிக காளைகள், அதிக வாடிவாசல்கள் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டும் தொடங்கும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு கந்தர்வக்கோட்டை தொகுதி தச்சன்குறிச்சியில் தொடங்கி நடந்து வருகிறது.
முதல் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளைக் கடந்த பல நாட்களாக விழாக்குழுவினர் செய்திருந்த நிலையில், ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உள்ளிட்டோர் தொடர்ந்து ஆய்வு செய்தனர். திட்டமிட்டபடியே இன்று (6ம் தேதி) காலை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கந்தர்வக்கோட்டை சின்னத்துரை, புதுக்கோட்டை முத்துராஜா மற்றும் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக 746 காளைகளும், 297 காளையர்களும் பதிவு செய்து களத்தில் உள்ளனர். வெற்றி பெறும் காளைகளுக்கும், காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட நேரம் நின்று விளையாடும் காளைக்கும், அதிக காளைகளைத் தழுவும் காளையருக்கும் மோட்டார் சைக்கிள்களும் பரிசாகக் காத்திருக்கிறது. முதல் ஜல்லிக்கட்டை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் வாடிவாசலில் குவிந்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும், அவசர சிகிச்சைக்கு மருத்துவக் குழுவினரும் முகாமிட்டுள்ளனர்.