தனியார்மயம், விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 மற்றும் 9-ம் தேதிகளில் அகில இந்திய அளவில் நடைபெறக்கூடிய வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கமும், அதனுடன் இணைக்கப்பட்ட சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அச்சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில், திருவாரூர் மாவட்ட அரசு பணியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா தலைமையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் சங்கத்தின் உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது. "குறைந்தபட்ச ஊதியம், குறைந்தபட்ச பென்ஷன், தனியார்மயம், விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 மற்றும் 9-ம் தேதிகளில் அகில இந்திய அளவில் நடைபெறக்கூடிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கமும், அதனுடன் இணைக்கப்பட்ட சங்கங்களும் பங்கேற்கவுள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ம் தேதி திருவாரூர் ரயில் நிலையம் முன்பாகவும், 9-ம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் வேலை நிறுத்தத்தில் உள்ள சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.
தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட ஊதிய மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்த குழு, அதன் அறிக்கையை 31-ம் தேதி வழங்க வேண்டும். அந்த அறிக்கையை அனைத்து சங்கங்களுக்கும் அனுப்பி அதன் மீது கருத்து கேட்பு நடத்திய பின்பு அறிவிப்புகளை வெளியிட வேண்டும்". என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.