தமிழ்நாடு உள்ளிட்ட 6 தென்மாநிலங்களின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று கோவையில் தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
இந்த மாநாட்டில் காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்பொழுது பேசிய முதல்வர், ''உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. மருத்துவக்கல்வி, தொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குகிறது தமிழ்நாடு அரசு. பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்திய உயர்கல்வியின் முக்கிய குறிக்கோளான அனைவருக்கு வேலைதரும் கல்வி வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடிய மிகப்பெரிய கடமை பல்கலை வேந்தர்களான உங்களுக்கு இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். திறன் சார்ந்த கல்வியையும், பயிற்சியையும் பாடத்திட்டத்தில் கட்டாயப்படுத்துவது அவசியம். அதனால்தான் மார்ச் ஒன்றாம் தேதி 'நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்' என்ற திட்டத்தை மாணவ செல்வங்களுக்காகத் துவக்கி வைத்தேன். அறிவியல்பூர்வமான சிந்தனைகளைக் கொண்டு மாணவர்களை வளர்த்தெடுக்கும் வகையில் உங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.