படங்கள்: அசோக், ஸ்டாலின்
தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களிப்பதற்காக தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் வாக்கு செலுத்த வந்திருந்தனர். முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அதேபோல் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மரியாதை செலுத்தினார். தமிழக பாஜக தலைவர் முருகன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கினைப் பதிவு செய்தார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்தார். புதுக்கோட்டை இலுப்பூர் அரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் அருகே ஓரடியம்புலம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசுப்பள்ளி வாக்குசாவடியில் அதிமுக எம்.பி கே.பி.முனுசாமி வாக்களித்தார். அவிநாசி தொகுதியில் போட்டியிடும் சபாநாயகர் தனபால் சேலம் குகை மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். திருத்துறைப்பூண்டி வேளுரில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகி முத்தரசன் அவரது குடும்பத்துடன் வாக்களித்தார்.