சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (31/07/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் விழாவில், தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் கொடியை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இதுவரை 10 மாநில காவல்துறைகள் மட்டுமே இந்த கவுரவ கொடியைப் பெற்றுள்ளன.
குடியரசுத் தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பின் கொடி முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, ஜம்மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம் பெற்றுக் கொண்டது. தமிழகத்தில் காவலர் முதல் டி.ஜி.பி. வரையிலான காவல்துறையினர் கொடியை இனி தங்கள் சீருடையில் அணியவுள்ளனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "குடியரசுத் தலைவர் கொடியைப் பெற்றதால் தமிழக காவல்துறை உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறுகிறது. இந்தியாவிலேயே முதலில் பெண்களுக்கு காவல்துறையில் முன்னுரிமை அளித்தது தமிழ்நாடுதான். தமிழகத்தில் கடந்த ஓராண்டில் சாதி, மதக் கலவரங்கள், துப்பாக்கிச் சூடுகள் இல்லை. காவல் நிலைய மரணங்களே இல்லை என சொல்லவில்லை; ஆனால் குறைந்துள்ளது. காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை காவல்துறை ஏற்படுத்த வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக் கூடாது. டி.ஜி.பி. முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
விழாவையொட்டி, ராஜரத்தினம் மைதானத்தைச் சுற்றி 200- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.