கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழக அமைச்சர்கள் நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டு அதிகாரிகள், ஊழியர்களை முடுக்கிவிட்டு நிவாரண பணிகளை முன்னின்று செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஊட்டிக்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்திவருகின்றனர்.
கடந்த சில தினங்களாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக ஊட்டி, கோத்தகிரி மலைப் பகுதிகளில் உள்ள சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்து கிடந்தது. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அப்படி சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை இயந்திரங்கள் துணையுடன் அப்புறப்படுத்தும் பணிகளை அமைச்சர்கள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
அவர்களுடன் கோவை மாநகர முன்னாள் துணை மேயரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் உட்பட பலரும் உடனிருந்தனர். முன்னதாக 15ந் தேதி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான விவசாயக் கண்காட்சியினை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கிவைத்து, கண்காட்சியினை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், கொடீசியா நிர்வாகிகள், சர்வதேச விவசாயக் கண்காட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.