காவிரியின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகா முயற்சித்துவருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும்விதமாகவும், மத்திய அரசு அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி முடிவும் செய்துள்ளது. மேலும், மேகதாது விவகாரம் குறித்து பேச தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சிக் குழு இன்று (15.07.2021) டெல்லிக்கும் சென்றுள்ளது.
இந்த நிலையில், தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு, அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் நடத்தும் இந்தப் போராட்டத்தில் கைக் குழந்தைகளுடன் பெண்களும் கலந்துகொண்டுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்த பி.ஆர். பாண்டியன், “மத்திய அரசு தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனில் மண் அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறது. கடந்தமுறை தமிழக காவிரி விவசாயிகள் டிசம்பர் மாத கடும் குளிரில் டெல்லியில் போராடினோம். பிரதமர் அலுவலகம் எங்களைச் சந்திக்க அழைத்தது. 3 பேர் போய் காத்திருந்தோம். ஆனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வீட்டில் கூடியவர்கள் பிரதமரை சந்திக்கவிடாமல் எங்களைத் தடுத்துவிட்டனர். பிறகு பொன். ராதாகிருஷ்ணன் வந்து சந்தித்துப் பேசினார். அந்தப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை இல்லாததால் போராட்டம் தொடர்ந்த நிலையில், முன்னாள் முதல்வர் கலைஞர், பாமக அன்புமணி, தமாகா ஜி.கே. வாசன் ஆகியோர் எங்கள் உயிர் முக்கியம் என்று அழைத்தனர். அப்படியும் தொடர்ந்து போராடினோம். ஆனால், கர்நாடகத்தின் செயலை மத்திய அரசு தடுக்கவில்லை. இன்று போகும் தமிழக குழு குடியரசுத் தலைவரை சந்தித்து அணை கட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் முற்றுகையிட வேண்டும்” என்றார். இந்தப் போராட்டாம் மேலும் விரிவடையும் நிலையில் உள்ளது.