Skip to main content

விஜயகாந்த் மறைவு;‘சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதை’ - தமிழக அரசு

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Tamil Nadu Govt announced Respect for brother for Vijayakanth's demise

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்த்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் திரைப் பிரபலங்கள் பலரும் விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். காலை முதலே, பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தற்போது தீவுத் திடலில் இருந்து தொடங்கியுள்ளது.

இறுதி ஊர்வலம் புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதில், தமிழக அரசு சார்பில், மறைந்த விஜயகாந்திற்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. விஜயகாந்த்தின் இறுதி ஊர்வல வாகனத்தை சுற்றியும் மக்கள் திரண்டு பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையில், தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, ‘ஒரு மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர் என்ற எண்ணம் இல்லாமல், சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல், குறையேதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் அக்கறையுடன் விஜயகாந்த்தின் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்’ என்று குறிப்பிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்