Skip to main content

அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ; சர்ச்சைக்கு விளக்கமளித்த தமிழக அரசு!

Published on 02/08/2024 | Edited on 02/08/2024
Tamil Nadu government explained the video released by Anitha Sampath

செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிரபலம் அடைந்தவர் அனிதா சம்பத்.  தனியார் தொலைக்காட்சியில்  தொகுப்பாளராக இருக்கும் அவர், ட்ராவல் தொடர்பான தகவல்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும் அதில், தொடர்ந்து டிராவலிங் செய்து வீடியோவையும் வெளியிட்டு வருகிறது. 

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அருகே உள்ள கொழுமணிவாக்கம் ஊராட்சிக்குச் சென்ற அனிதா சம்பத், அங்கிருந்து ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டது பேசுபொருளாக மாறியது. கொழுமணிவாக்கம் ஊராட்சி குளத்திற்கு நடைபாதை, படிக்கட்டு மேம்பாட்டுப் பணி குறித்து எழுதப்பட்ட சுவற்றை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அனிதா சம்பத்.. அதில், “நான் வந்து மாங்காடு பக்கத்தில் இருக்கிற கொழுமணிவாக்கம் என்ற இடத்தில் இருக்கேன். இங்க ஒரு போர்டு போட்டு இருக்காங்க. இந்த போர்ட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கொழுமணிவாக்கம் ஊராட்சி, திருக்குளத்திற்கு நடைபாதை, படிக்கட்டு மேம்பாட்டுப் பணி, மதிப்பீடு ரூ.11.36 லட்சம்னு போட்டுருக்காங்க.. இந்த படிக்கட்டை பாருங்க... இதைப் போட 11 லட்சம் ரூபாய் ஆகுமா? இந்த பணத்தில் வீடே கட்டுறாங்க.. நானும் சுத்தி எதாவது கட்டியிருப்பாங்கன்னு தேடிப் பார்த்தேன்... ஆனால் எங்கேயும் எதுவும் கிடையாது... இந்த ஒரு படிக்கட்டுக்கு எதுக்கு இவ்வளவு பணம்..” என்று பேசியிருந்தார். 

இந்த ரீல்ஸ் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது. பலரும் இதற்குக் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு தகவல் சரிபார்க்கும் குழு தனது எக்ஸ் தளத்தில், அனிதா சம்பத் பேசியதைச் சுட்டிக்காட்டி 'வதந்தியை பரப்பதீர்கள்' என விளக்கத்தை அளித்துள்ளது. அதில், “காஞ்சிபுரம் மாவட்டம் கொழுமணிவாக்கம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2022- 2023 ஆம் ஆண்டில், திருக்குளத்தின் நடைபாதை, படிக்கட்டு மட்டுமின்றி, நீர்வரத்து மற்றும் வெளியேறும் வழி, மின் விளக்குகள், சிமெண்ட் இருக்கைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன.." என ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து, அதற்கான செலவினங்கள் பட்டியலையும் குறிப்பிட்டுள்ளது. அதில், "படித்துறை அமைப்பதற்கு ரூ.1.70 லட்சம், inlet and outlet அமைக்க 66 ஆயிரம், நடைபாதை அமைத்தல் பேவர் பிளாக்கிற்கு ரூ.6.17 லட்சம், நடைபாதையைச் சுற்றிலும் மின் விளக்குகள் அமைக்க ரூ.96 ஆயிரம், மேசைகளுக்கு ரூ.12 ஆயிரம், இதற்கெல்லாம் மத்திய அரசின் GST ரூ.1.73 லட்சம் என மொத்தம் செலவு ரூ.11.36 லட்சம்.." என்ற கணக்கினை தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும், படிக்கட்டுக்கு ரூ11 லட்சமா? என்று அனிதா சம்பத் கூறுவது பொய் செய்தி என்ற தலைப்புடன் விளக்கம் அளித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்