சட்டப்பேரவை வீதி 26/1 கீழ் தமிழக சட்டப்பேரவை கூட்டம் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி காலை 09.30 மணிக்குத் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பைச் சபாநாயகர் அப்பாவு கடந்த 25ஆம் தேதி (25.11.2024) வெளியிட்டார். அப்போது அவர், “சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி முடிவெடுக்கும். சட்டப்பேரவை கூட்டத்தொடரை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று (02.12.2024) காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவு அறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன. அப்போது டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் மதுரையில் அமைக்கத் திட்டமிடப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரத் தமிழக முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகச் சபாநாயகர் அப்பாவும் செய்தியாளர் சந்தித்துப் பேசுகையில், “மாநில அரசிடம் அனுமதி பெறாமல் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த தீர்மானம் சட்டப்பேரவைக் கூட்டத்தின் முதல் நாளில் கொண்டு வரப்படும். இரண்டு நாட்களும் கேள்வி நேரம் உண்டு” எனத் தெரிவித்தார்.
முன்னதாக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு அப்பகுதியில் கடந்த 29ஆம் தேதி (29.11.2024) கடையடைப்பு போராட்டமும் நடத்தினர்.
அதே சமயம் டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து மேலூரில் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் அமைச்சர் மூர்த்தி, “டங்ஸ்டன் சுரங்க ஆய்வுக்குக் கூட தமிழக அரசு அனுமதிக்காது” என உறுதி அளித்துள்ளார். இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடந்த 28ஆம் தேதி (28.11.2024) கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.