மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை 1,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும், கடுமையான மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து வகை மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து பேருந்துகள், ரயில்கள் மூலம் சென்னை வந்த மாற்றுத்திறனாளிகள் சென்னை சேப்பாக்கம் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அப்பொழுது போலீசாருக்கும் போராட வந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இரண்டே மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரை தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. உதவித்தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.