சுற்றுச்சூழல் போராளி முகிலனை இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். முகிலன் மீதான பாலியல் புகார் வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசார், அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரினார்கள்.
நீதிபதி, 3 மணி நேர விசாரணைக்கு அனுமதித்தார். அத்துடன் முகிலன் வழக்கறிஞர் விசாரணையின்போது உடன் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். நீதிபதி இப்படி சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. முகிலன் நீதிமன்றத்தில், ''என்னை சிறையில் வைத்து கொல்ல சதி நடக்கிறது'' என பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார். அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இது பலமாக எதிரொலித்தது. இந்த குற்றச்சாட்டின் வீரியத்தை புரிந்துகொண்ட நீதிபதி, முகிலனை நாள் கணக்கில் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி மறுத்தார் என்கிறார்கள் முகிலனுக்கு நெருக்கமானவர்கள்.
மேலும் அவர்கள் ஒரு சோகமான விவரத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள். முகிலனுக்கு இதுவரை முகச்சவரம் கூட செய்ய போலீஸ் அனுமதிக்கவில்லை. அவர் பல நாள் அழுக்கேறிய தாடியுடன்தான் திருப்பதியில் கைதானார். அதே தாடியுடன்தான் அவர் இத்தனை நாள் சிறைவாசத்திற்கு பிறகும் காணப்படுகிறார். முகிலனின் மனநலம், உடல்நலம் ஆகியவற்றிற்கு உரிய சிகிச்சையை சிறைத்துறையும், போலீசாரும் அளிக்கவில்லை. அவரை உடனடியாக தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தி அவரது உடல்நலனையும் மனநலனையும் பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கிறார்கள்.