ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் ஆட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்து மனுக்களை வழங்கினர்.
அப்போது, பவானி வட்டம் பெரிய தலையூர் செரையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நல்லையன் என்பவர் சங்கு ஊதியபடி மனு கொடுக்க வந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அவர் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'எங்கள் பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் எங்கள் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடந்து செல்வதில் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் குண்டும் குழியுமான சாலையால் விபத்தும் ஏற்படுகிறது. இது குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்கள் பகுதியில் உள்ள சாலைகளை சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.