Skip to main content

4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 11/01/2025 | Edited on 11/01/2025
CM MK Stalin made 4 important announcements 

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி இன்று (11.01.2025) வரை  நடைபெற்றது. அதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிப்பது மீதான விவாதம் முடிவடைந்த நிலையில் தமிழக முதல்வர் பதிலுரை வழங்கினார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார். அதில், “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளில் ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும். இத்தகைய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும். பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று, சிறையில் இருக்கின்ற கைதிகளுக்கு முன் விடுதலை கிடைக்காத வகையில் தமிழ்நாடு சிறைத் துறை விதிகள் திருத்தம் செய்யப்படும்.

இரண்டாவது அறிவிப்பாக, மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி, உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டியுள்ள கிராமங்களும் மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது.  இதனால் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி அமைப்புகளின் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகி இருக்கின்றன. இந்த நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இந்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டிலுள்ள சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் புதிய சாலைகளை அமைத்திடவும், பழுதடைந்துள்ள சாலையை சீரமைத்துப் புதுப்பித்திடவும், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைகளால் சேதப்பட்டுள்ள சாலைகளைச் சீரமைத்திடவும் வரும் ஆண்டுகளில் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புர சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியோடு இந்த மாமன்றத்திற்கு அறிவிக்கிறேன்.

மூன்றாவது அறிவிப்பாக பல்வேறு கோரிக்கைகளை ஏற்று மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த வரும் ஆண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வரப்படும். நான்காவது அறிவிப்பாக, இந்த அரசு பதவி ஏற்றபின் ஏழை எளிய பட்டியலின மக்களுக்கு 2 இலட்சத்து 67 ஆயிரத்து 437 மனைகளை வரன் முறைப்படுத்தி இ-பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்விதமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களைச் சீர்செய்தும் புதியதாக நிலங்களைக் கையகப்படுத்தியும் ஒரு இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் அவர்களுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்