சிலந்தி ஆற்றின் அருகே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் என பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தில், 'சிலந்தி ஆற்றின் அருகே கட்டப்படும் தடுப்பணை பிரச்சனை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு விவரங்கள் மிகவும் தேவை என்பதால் இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான தோழமை உணர்வை நிலைநிறுத்த இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணும் வரை இந்த பணியை நிறுத்தி வைக்குமாறு கேரள அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்த வேண்டும். இந்த தடுப்பணை விவகாரம் குறித்த திட்டம் எதுவும் தமிழக அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடுமோ வழங்கப்படவில்லை. திட்டம் தொடர்பான விவரங்களை தமிழகத்தின் நீர்வளத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் கேரள நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளார். இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரத்தின் முழு விபரங்களை தமிழ்நாடு அரசுக்கு கேரள அரசு உடனடியாக வழங்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.