வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேக்கமடைந்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். நேற்று சென்னையில் பல இடங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்த நிலையில், இன்று கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார்.
அதன் காரணமாக கடலூர் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழ்ப்பூவாணிக்குப்பம் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டார். அங்கு வடிகால் பணிகள் முறையாகச் சீரமைக்கப்பட்டுள்ளதா எனக் கேட்டறிந்த தமிழக முதல்வர், பாதிப்புகள் தொடர்பாக அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படக் காட்சிகளைப் பார்வையிட்டார். மேலும், அங்கிருந்த மக்களுக்கு நிவாரண உதவிகளையும் தமிழகம் முதல்வர் வழங்கினார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் இந்த ஆய்வின் போது உடனிருந்தனர்.