Skip to main content

மொழிப்பாட ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி; ஆணையை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல் 

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

tamil and english language teachers posting issue 

 

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஐடிஐ எனப்படும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் மொழிப்பாடங்களை பயிற்றுவிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி மொழிப்பாட ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டு வருகிறது.

 

பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அரசின் இந்த திடீர் உத்தரவால் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி கிளம்பியுள்ளது. அரசு ஐடிஐக்களில் பணியாற்ற மாற்றுப்பணி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பட்டதாரி ஆசிரியர் சங்கங்களின் தரப்பில் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ‘பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் தமிழ், ஆங்கில மொழிப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் ஐடிஐக்களில் மொழிப்பாடங்களை கற்பிப்பதற்காக மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களை மற்றொரு துறைக்கு மாற்றுப்பணியில் நியமித்திடும் புதிய நடைமுறை ஏற்கத்தக்கது அல்ல. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், பள்ளிகளில் பணியாற்றி வரும் மொழிப்பாட ஆசிரியர்களை ஐடிஐக்களுக்கு அனுப்புவதால் பள்ளி மாணவர்களின் கற்றல் சூழல் பாதிக்கப்படும். இதுபோன்ற மாற்றுப்பணி ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுவரை மாற்றுப்பணியில் சேர்ந்த ஆசிரியர்களை அவரவர் பணியாற்றி வரும் பள்ளிகளுக்குத் திரும்ப ஆவன செய்ய வேண்டும்.’  என்று கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்