ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலைக்கு ஊர் மாலையோடு காகிதப் பூ மாலைகள் அணிவிப்பு தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங் கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் முன்பு 35 அடி உயரத்தில் வானில் தாவிச் செல்லும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது பிரமாண்ட குதிரை சிலை. எதிரில் இருந்த யானை சிலையை காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றாலும் குதிரை சிலையை ஆற்று வெள்ளத்தாலும் அசைக்க முடியவில்லை. அதனால் பிரமாண்ட குதிரை சிலையை காண லட்சக் கணக்கான மக்கள் திரள்வது வழக்கம்.
ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று புதுக்கோட்டை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். மாசி மகம் நாளில் 35 அடி உயரம் கொண்ட பிரமாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் கிராமத்தின் சார்பில் முதல் மாலை அணிவித்த பிறகு நேர்த்திக் கடன் உள்ள பக்தர்கள் லாரி, கார், வேன்கள் மூலம் பூ மாலை மற்றும் காகிதப் பூ மாலைகள் அணிவிப்பதும் மறுநாள் தெப்பத் திருவிழாவும் நடத்தப்படுகிறது.
கடந்த பல வருடங்களாக பிரமாண்ட குதிரை சிலைக்கு மாலைகள் அதிகமாக அணிவிக்கப்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பக்தர்களின் வசதிக்காகவும் கிராமத்தின் சார்பில் முதல் மாலையை ஒருநாள் முன்னதாக அணிவித்து வருகின்றனர். அதே போல நாளை திங்கள் கிழமை மாசி மகம் என்றாலும் இன்றே ஆயிரக்கணக்கான மாலைகளுடன் வாகனங்கள் 4 பக்க சாலைகளிலும் அணிவகுத்து நிற்பதால் கிராமத்தின் முதல் மாலையாக பூ மாலையை சுவாமியின் சிறப்பு அபிஷேகத்துடன் குதிரை சிலைக்கு அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து கிராமத்தின் மாலை அணிவிக்கப்பட்ட பிறகு அவரது குடும்பத்தாரின் பூ மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பூ, பழம், காகித மாலைகள் அணிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான மாலைகள் குதிரை சிலைக்கு குவிந்துள்ளது. இன்னும் நாளை இரவு வரை மாலைகள் அணிவிக்கப்பட உள்ளதால் சுமார் 3 ஆயிரம் மாலைகள் வரை குதிரை சிலைக்கு நேர்த்திக் கடனாக அணிவிக்கப்படலாம் என்கின்றனர்.
ஆங்காங்கே அன்னதான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்துள்ளனர். சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.