அரசுப்பள்ளி மாணவர்களுக்காக மைக்ரோசாஃப்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கடந்த அக்டோபரில் நடந்த தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவுகள் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். முடிவுகளை வெளியிட்ட பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “எந்த நிகழ்விற்குப் போனாலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாக வைப்பவன். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தபோது கூட அவரிடம் பேசினேன். சார், ஏதோ தனியா க்ளாஸ் வச்சு நடத்துறதா கேள்விப்பட்டேன். அதில் அரசுப்பள்ளி மாணவிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர் அரசுப்பள்ளி மாணவிகளுக்கும் அந்தப் பயிற்சியைக் கொடுத்துக்கொண்டு உள்ளோம் என்று சொன்னார். உள்ளபடியே மகிழ்ச்சி.
அமெரிக்கா சென்றிருந்த போது அங்கே மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போய் பார்த்தோம். டீல்ஸ் என்ற அமைப்பின் மூலமாக ஐ.டி. துறையில் வேலை செய்து கொண்டு இருக்கும் நபர் அருகில் இருக்கும் பள்ளிக்குச் சென்று தான் பணியாற்றும் துறை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்கிறார். அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக அதைப் பார்க்க முடிந்தது. இதே போன்ற நிகழ்வை நீங்கள் எங்கள் பள்ளி மாணவர்களிடமும் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லியுள்ளோம்.
வெறுமனே நீங்கள் பாடம் நடத்திச் செல்வதைக் காட்டிலும் உங்கள் நிறுவனத்தின் சான்றிதழ் கிடைத்தால் மாணவர்கள் பள்ளி முடிந்து செல்லும்போது அவர்களுக்கு இன்னும் அது மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் நிறுவனத்தில் ஆலோசனை செய்துவிட்டுச் சொல்லுகிறோம் எனச் சொல்லியுள்ளார்கள். இது போன்ற முயற்சிகள் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.