!["Take action to recover" - Tamil Nadu student video Ukraine !](http://image.nakkheeran.in/cdn/farfuture/eQqX1fJP4fkSSzB_P7240dwK8Q1M8brsW5p0lAodsJk/1645782232/sites/default/files/inline-images/th-2_774.jpg)
உக்ரைனில் தவிக்கும் வேளாங்கண்ணியைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் கொட்டும் பனியில் நின்றபடி உருக்கமாகப் பேசி வெளியிட்டுள்ள வீடியோ பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் கடும் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பூக்காரத்தெருவைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ என்பவரது மகள் வின்சியா உருக்கமாகப் பேசிய வீடியோ தான் அது.
"உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வின்சியா, குடியிருப்புகளின் சுரங்கங்கள், சப்வே, மெட்ரோ போன்ற இடங்களில் பாதுகாப்பற்ற முறையில்தான் நாங்கள் தங்கவேண்டி நிலை உருவாகியுள்ளது. உணவு இல்லாமலும் மாற்று உடை ஏதும் இல்லாமலும் தவித்து வருகிறோம்" என கொட்டும் பணியில் நின்றபடியே வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர், "நான் தங்கி இருக்கும் பகுதியில் சிக்கியுள்ள எட்டாயிரம் இந்திய மாணவர்களையும், உக்ரைன் நாடு முழுவதுமுள்ள 20 ஆயிரம் இந்திய மாணவர்களையும் மீட்க இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கண்ணீர் மல்க வலியுறுத்தியுள்ளார்.