பணி ஓய்வுக்கு பின் டி.என்.சேஷனை பயன்படுத்திக் கொள்ள ஆட்சியாளர்கள் முன்வரவில்லை என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் அவர்களுடைய மறைவிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தவறான ஆட்சியாளர்களை மாற்ற, யார் தங்களை ஆள வேண்டுமென்பதை முடிவு செய்ய சாதாரண மக்களிடத்தில் இருக்கின்ற ஒரே ஆயுதம் தேர்தலிலே அளிக்கின்ற வாக்கு.
டி.என்.சேஷன் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற நேரத்தில் வாக்களிக்க வருகின்ற மக்களை பயமுறுத்துகின்ற அரசியலும் இருந்தது. தங்களுக்கு வேண்டாதவர்களை வாக்களிக்க அனுமதிக்காத அராஜகமும் இருந்தது. அதையெல்லாம் தகர்த்தெறிந்தவர் டி.என்.சேஷன் அவர்கள்.
ஒரு தேர்தல் ஆணையராக இருக்கின்ற ஐஏஎஸ் அதிகாரிக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கிறது என்பதை இந்த நாட்டிற்கு காட்டியவர். தலைமை தேர்தல் ஆணையராக மட்டுமல்லாமல் ஒரு அதிகாரியாக இந்திய தேசத்தின் அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டுமென்று பாடம் கற்பித்தவர். அவர் வழியில் இந்திய அதிகாரிகள் நடந்தால் உலக நாடுகளிலேயே முதன்மை நாடாக இந்தியா உருவெடுக்கும். ஆனால் அப்படிப்பட்ட அதிகாரிகளை ஆளுகின்ற அரசாங்கங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை என்பதற்கு டி.என்.சேஷனுடைய வாழ்க்கையே உதாரணம்.
ஏனென்றால் தவறு செய்தால் ஆட்சியாளர்களையே எதிர்த்து கேள்வி கேட்பதோடு மட்டுமல்லாமல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர். இந்திய தேசத்தினுடைய அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் டி.என்.சேஷன் அவர்களை போல தான் செயல்படுவோம் என்று இந்நாளில் உறுதி எடுத்துக் கொண்டால் அரசியல்வாதிகளால் இந்த நாட்டிற்கு ஆபத்து இல்லை.
டி.என்.சேஷன் அவர்கள் மறைந்த பின்னால் புகழஞ்சலி செலுத்துகின்ற பல இந்நாள், முன்னாள் ஆட்சியாளர்கள் அவருடைய ஓய்வுக்கு பின் அவரை பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லை என்பதுதான் உண்மை. அந்த வருத்தத்தோடு அவருடைய மறைவு பெரும் பாடமாக அமைய வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.