குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் பிராட்வின் மிபியா (வயது 21). நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி மாணவியாக மிபியா பணியாற்றினார்.
இந்தநிலையில் மிபியா, கடந்த வாரம் தனது காதலனுடன் செல்ஃபோனில் வீடியோ காலில் பேசியவாறே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விவரம் அறிந்து அங்குவந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிந்து, மாணவியின் தற்கொலைக்கு காதல் பிரச்சினை காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், மிபியா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதத்தைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் கடிதத்தில் மிபியா, ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க, நான் காதலுக்கு தகுதியானவள் கிடையாது. மன்னிச்சிடு பாப்பு, மன்னிச்சிடுங்கள் அப்பா, அம்மா, தம்பி ஜெதீஸ்’ என எழுதப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும், தற்போது கிடைத்திருக்கும் இந்தக் கடிதம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.