தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று பரந்தூர் சென்று, விவாசாயிகளிடையே பேசிய போது, “கிட்டத்தட்ட 910வது நாட்களுக்கு மேலாக உங்கள் மண்ணுக்காக போராடி வருகிறீர்கள். உங்கள் போராட்டத்தைப் பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசினார். அந்த குழந்தையோட பேச்சு மனதை ஏதோ செய்துவிட்டது. உடனே உங்கள் எல்லோரையும் பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது. நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள் கேட்கிறேன். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள்.
அதே நிலைப்பாட்டை தானே இங்கேயும் எடுத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா?. உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் உங்களுடைய வசதிக்காக அவர்களோடு நிற்கிறதும், அவர்களோடு நிற்காமல் இருக்கிறதும், நாடகம் ஆடுறதும் நாடகம் ஆடாமல் இருக்கிறதும். அது சரி, நம்புற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடிகள் ஆச்சே. அதையும் மீறி விவசாயிகள் போராட ஆரம்பித்தால் பிரச்சனை தான். அதனால் இனிமேல் உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
உங்களுடைய விமான நிலையத்திற்காக நீங்கள் ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் கேட்டுக் கொள்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடங்களை பார்த்து உங்களுடைய விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும்” எனத் தெரிவித்திருந்தார். விஜய்யின் கருத்து ஆதரவாகவும், எதிராகவும் தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், “நடிகர் விஜய் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை. சினிமா சூட்டிங் போன்று ஆங்காங்கே குரூப் குரூப்பாகச் சென்று பேசுகிறார். 234 தொகுதிகளிலும் அவர் போட்டியிடப் போகிறார் என்றால், புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒண்ணும் செய்ய முடியாது; அது அவருக்கும் தெரியும். தற்போதைய அரசியல் சூழல் அப்படியே நீடித்தால் திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும். தேர்தல் என்பது கூட்டணி கணக்கு; இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. அதற்கு முன்பே விஜய்யை விமர்சிக்ககூடாது” எனத் தெரிவித்துள்ளார்.