சேலத்தில் அரசு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு இருந்த விழா மேடை சரிந்த விவகாரத்தில் விஏஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் சித்தர் கோயில் அருகே உள்ள முருங்கப்பட்டியில், மக்கள் சந்திப்புத் திட்ட முகாம் செப். 26ம் தேதி நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., அதிமுக எம்எல்ஏ ராஜமுத்து மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்த விழாவிற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடை, திடீரென்று சரிந்து விழுந்தது. மேடையில் அமர்ந்து இருந்த பிரமுகர்கள் பதற்றம் அடைந்தனர். இதனால் விழா சிறிது நேரம் தடைப்பட்டது. இது தொடர்பாக சேலம் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன் விசாரணை நடத்தினார். விழா ஏற்பாடுகளை சரியாகச் செய்யாத முருங்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) கண்ணனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
விழா மேடை சரிந்த சம்பவத்தில் விஏஓ பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம், வருவாய்த்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.