பொங்கல் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சிறப்புக் குழுக்கள் மூலம் தமிழக போக்குவரத்து சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி 15 ஆயிரத்து 650 ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்த ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.36.55 லட்சம் தமிழக போக்குவரத்து சார்பில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை தமிழக போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறைக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரை முறைப்படுத்த மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் பதிவு செய்து தமிழகத்தில் சுமார் ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. இது போன்று பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் அந்தந்த மாநிலங்களில் தடையில்லா சான்று பெற்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் மறுபதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் பிற மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை எனவும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.