Skip to main content

காவிரி வழக்கை சட்டப்படியில்லாமல் தன் இஷ்டப்படியா தீர்க்கும் உச்சநீதிமன்றம்? வேல்முருகன் கேள்வி

Published on 17/02/2018 | Edited on 17/02/2018
velmurugan


காவிரிப் பங்காளி மாநிலங்களின் மீளாய்வு வழக்கைச் சட்டப்படியில்லாமல் தன் இஷ்டப்படியா தீர்க்கும் உச்ச நீதிமன்றம்? குடிநீர், நிலத்தடி நீர், மொழிவழி மாநிலம் என வழக்கிற்குத் தொடர்பே இல்லாதவையெல்லாம் வந்ததெப்படி தீர்ப்பில்? வேலியே பயிரை மேய்தல், காவலாளியே கழுத்தை அறுத்தல் போன்றே காணப்படுவதேன் ஒன்றிய நீதி பரிபாலனம்? காவிரி மீளாய்வு வழக்கின் தீர்ப்பில் உள்ள சட்ட முரண்களைச் சுட்டிக்காட்ட வேண்டிய ஜனநாயகக் கடமையையும் பொறுப்பையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உணர்கிறது என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மீளாய்வு செய்து வழங்கிய தீர்ப்பு இது. முந்தையத் தீர்ப்பில் இல்லாத ’குடிநீர்’ எனும் விடயத்தைக் கொண்டுவந்து, அதற்காக குறிப்பிட்ட அளவு டிஎம்சி நீரை கர்நாடகாவிற்கு ஒதுக்கியது எப்படி?

காவிரி நீர் குறித்த வழக்கில் அதற்குத் தொடர்பேயில்லாத ’நிலத்தடி நீர்’ என்பதைக் குறிப்பிட்டு, அது தமிழ்நாட்டில் இவ்வளவு இருப்பதாகக் காட்டி தமிழ்நாட்டுக்கான டிஎம்சி அளவைக் குறைத்ததேன்?

தண்ணீருக்குப் பதில் தமிழர்களின் வாயில் மண்ணைப் போடுவதைவிடவும் கொடிய ஒரு விடயம், “மொழிவழி மாநிலம் என்ற அடிப்படையில் காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தமானதில்லை” என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாகும்.

 


அப்படியென்றால் பிறகு காவிரி யாருக்குத்தான் சொந்தம்?



தெரியாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள்! திட்டமிட்டுச் சொல்கிறீர்கள் என்றால் வேண்டாம் விபரீதம், விட்டுவிடுங்கள்!

காவிரிக்குச் சொந்தகாரர்கள் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய இந்த நான்கு பங்காளிகளும்தான். இது இந்திய ஒன்றியம் உருவாவதற்கு முன்பே உள்ள தொன்றுதொட்ட சொந்தம்.

ஜனநாயக நாட்டில் அரசமைப்புச் சட்டம்தான் அனைத்திற்கும் அடிப்படை; அந்த சட்டத்தையும் தீர்மானிப்பவர்கள் மக்கள். நாடாளுமன்றமோ நீதிமன்றமோ நிர்வாக எந்திரமோ எவையாக இருந்தாலும் அவை மக்களுக்குக் கட்டுப்பட்டவையே.

எனவே ”சட்ட முரண்” என்பது ”மக்களுக்கு எதிர்நிலை” என்றுதான் பொருள். இது காவிரி மீளாய்வு வழக்குத் தீர்ப்பில் ”தமிழர்களுக்கு எதிர்நிலை”யாக வெளிப்பட்டிருக்கிறது.

இது ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிர்நிலைதான் என்பதை அழுத்தம்திருத்தமாகப் பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்