ஞாயிற்றுக்கிழமையன்று தூத்துக்குடி வந்து பல நலத்திட்டங்களை துவக்கியும், திறந்தும் வைத்து விட்டு, நானும் உங்களுடன் இருக்கின்றேன் என்பதற்காக, "ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்தே போராடியவன் நான். முந்தைய தேர்தலின் போது, ஸ்டெர்லைட் ஆலைச் சார்பில் எனக்கு பணம் கொடுத்த போது கூட அதைத் திருப்பி அனுப்பினேன். ஆனால் நான் பெட்டி வாங்கிவிட்டதாகப் பலரும் அவதூறு பரப்பி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு முன்பு 4 நாட்கள் நான் உண்ணாவிரதம் இருந்தேன். அன்று மக்கள் யாருமே ஆதரவு தர தயாராக இல்லை. அனைவருமே வேலைக் கிடைக்கும் என்றே நினைத்து இருந்தனர். அதனால் ஆலை எளிதாகத் துவங்கப்பட்டு விட்டது. அப்போது அந்த ஆலைத் தரப்பில் என்னிடம் டீல் பேசினர். அவர்கள் அணுகியபோதும், தேர்தல் செலவுக்காக எனக்கு பணம் கொடுத்த போதும் மறுத்தவன் நான்” என மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பொத்தாம் பொதுவாக கூறிவைத்தது தான் அவருக்கு வினையாகியுள்ளது.
"அமைச்சருக்கு என்ன வகைக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்துள்ளது.? என்ற விவரம் அவ்வாறு முயற்சி செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் எடுத்த நடவடிக்கை மற்றும் அவர் கொடுத்த புகார் மனு நகலும் வேண்டும். அமைச்சருக்கு லஞ்சமாக கொடுக்க முயற்சி செய்த தொகை எவ்வளவு.? அமைச்சர் ஸ்டெர்லைட் தொடர்பாக என்னென்ன ஆவணங்கள் கையொப்பமிட்டுள்ளார். அமைச்சரால் கையொப்பமிடப்பட்ட ஸ்டெர்லைட் தொடர்பான ஆவண நகல் எது.? மற்றும் அமைச்சர் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு என்னென்ன சான்றுகள் மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு பரிந்துரை செய்துள்ளார்.? அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட கடித நகல் வேண்டுமென பல கேள்விகளை ஆர்.டி.ஏ.மூலம் கேட்டு மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனுக்கு பலத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளார் திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞரும், சமூகநல ஆர்வலருமான பிரம்மா. இது தற்பொழுது அரசியல் வட்டத்தில் பலத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.