ஜூன் 12-ல் காவிரி நீர் கிடைக்க உச்சநீதிமன்றம் ஆணையத்தை கண்காணித்திட வேண்டும் என பி.ஆர் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,
தமிழக காவிரி உரிமை மீட்பிற்க்கான போராட்டம் தமிழக அரசு, அனைத்து கட்சிகள், விவசாய அமைப்புகள், வணிகர்கள் , இளை ஞர்கள், மாணவர்கள் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்தக்கருத்தோடு தமிழர் என்ற உணர்வோடு அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டோம்.
ஆனால் மத்திய அரசோ வாரியம் அமைக்க இறுதி கட்டம் வரை மறுத்து தமிழக நலனுக்கு எதிராக ஆணையம் தான் அமைப்பேன் என்று துரோகம் செய்துள்ளது. இந் நிலையில் உச்சநீதிமன்றம் உறுதியோடு நின்று தமிழக நலன் கருதி முழு அதிகாரம் கொண்ட ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்.
இதனை ஏற்று மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து அதனை அரசிதழில் வெளியிட்டு முதல் கூட்டம் உடன் நடத்தப்பட்டு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைத்திட செய்திட வேண்டும். 15 ஆண்டுகள் வரை தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய இயலாது என்பதால் ஆணையத்தின் செயல்பாடுகளை தமிழக விவசாயிகள் நலன் கருதி உச்சநீதி மன்றமே தொடர்ந்து கண்காணித்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
காவிரி உரிமை மீட்பிற்க்கான போராட்டத்தில் ஒத்த கருத்தோடு உறுதியோடு போராடி சட்ட அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான தமிழக அரசு, எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர்கள் , விவசாய அமைப்புகள், தொழிற்சங்க அமைப்புகள், அரசு ஊழியர்கள், தமிழகத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், உயரதிகாரிகள், பத்திரிக்கை, ஊடக செய்தியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காவிரி டெல்டா விவசாயிகள் சார்பில் நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அங்கொன்றும் இங்கொன்றுமான போராட்டத்திற்கெதிரான அடக்கு முறையை கையாண்டாலும் உணர்வுபூர்வமாக காவிரி உரிமை மீட்டிட உதவி செய்த காவல்துறைக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்துகிறோம். தொடர்ந்து தீர்ப்பை செயல்படுத்தும்வரை ஒன்றுப்பட்ட போராட்டம் தொடர்ந்திடவும், ஏற்கனவே இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், விவசாயத்தையும், விளை நிலங்களையும் பாதுகாக்க ஒன்றுப்பட்ட போராட்டம் தொடர்ந்திடவும் வேண்டுகிறோம்.
மேலும் போராட்டத்தில் பங்கெடுத்த தமிழக முதலமைச்சர், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், வணிகர்கள் , விவசாயிகளுக்கு பாராட்டு விழாவை ஜூன் மாதத்தில் நடத்துவோம் என்றார்.