தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, வாச்சாத்தி மலைக் கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் விசாரணை நடந்த காலகட்டத்திலேயே வழக்கில் சம்பந்தப்பட்ட 54 பேர் இறந்தனர். மீதமுள்ள 215 பேருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை விசாரணை நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு தண்டனை வழங்கி இருந்தது. இதில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டது. தண்டனை பெற்றவர்கள், தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி (29.09.2023) சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
வாச்சாத்தியில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் அவர்களின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது தனியார், சுய வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும். வாச்சாத்தி நிகழ்வின் போது அப்போதைய எஸ்.பி, ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களிடம் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு அனைத்துத் தரப்பிலும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் முதன்மைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐஎஃப்எஸ் அதிகாரிகள் எல்.நாதன், பாலாஜி, ஹரி கிருஷ்ணன் ஆகிய இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது எல். நாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘எல். நாதனுக்கு வயதாகி இருக்கிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததன் காரணமாக நீதிமன்ற சரண்டர் ஆவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் பாலாஜி தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை முற்றிலும் நிராகரித்த நீதிபதி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐஎஃப்எஸ் அதிகாரி எல்.நாதன், பாலாஜி, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் வரும் ஆறு வார காலத்திற்குள் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அரசியல் கட்சிகள் வரவேற்று வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி இந்திய வனத்துறை அதிகாரி நாதன் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்குக் கூட ஏற்காமல் தள்ளுபடி செய்திருக்கிறது. வாச்சாத்தி மக்களுக்கு நிறைவு நீதி வழங்கும் வகையிலான உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
1992 ஆம் ஆண்டு வாச்சாத்தி கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை மூடி மறைப்பதற்காகக் கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து வழிகளிலும் முயற்சிகள் நடந்தன. பணம், பதவி, உருட்டல், மிரட்டல் என அனைத்தையும் பயன்படுத்திப் பாதிக்கப்பட்ட மக்களின் வாயையும், உண்மை மற்றும் நீதியின் குரல்வளையையும் நெறிக்க முயற்சிகள் நடைபெற்றன. அவை அனைத்தையும் முறியடித்துத் தான் தர்மபுரி முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் வாச்சாத்தி மக்களுக்கு நீதி வழங்கின. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலம் பல்லாண்டு காலத்தைக் கடத்தலாம், தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று முயன்றனர். ஆனால், தொடக்க நிலையிலேயே மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்திருப்பதன் மூலம் அந்த சதியை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
எனவே, இனியும் தாமதிக்காமல் பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்குத் தமிழக அரசு நீதி வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தவாறு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் உடனடியாக வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.