உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும், மத்திய சட்ட அமைச்சரும், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூகத்தின் பன்முகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் நியமனம் நடைபெறுவது அவசியம் என்று கூறியுள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதிய அளவில் அழுத்தம் கொடுத்து செயல்முறைக்குக் கொண்டுவர ஆவன செய்யுமாறு வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (09/06/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ஒன்றிய சட்ட அமைச்சர் கருத்துப்படி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பெண்கள் ஆகியோருக்கு உரிய இடம் அளித்திடுக! அனைத்துக் கட்சியினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு அழுத்தம் கொடுத்திடுக!
‘தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி’ என்பது நீண்ட காலமாக அனைவரும் அறிந்த சொலவடையே! நமது நாட்டில் உள்ள உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் முழு எண்ணிக்கை 34; அதில் 7 நீதிபதிகளின் இடம் காலியாகவே நிரப்பப்படாமல் இருக்கின்றன இன்றைய நிலவரப்படி. அதுபோலவே இந்தியாவின் பற்பல மாநிலங்களிலும் உள்ள உயர்நீதிமன்றங்கள் மொத்தம் 25 ஆகும். அந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளில் நிரப்பப்படாத உயர்நீதிமன்ற நீதிபதிகளது இடங்கள் 430 (01/06/2021 தேதிப்படி). உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் என்.வி.இரமணா கருத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஜஸ்டீஸ் என்.வி.இரமணா அவர்கள் இந்த காலி இடங்கள் வெகுவிரைவில் நிரப்பப் பட வேண்டும்.
அதற்கான ஒத்துழைப்பைக் கோரி பற்பல உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளிடமும் மற்ற முக்கிய உயர் வட்டாரங்களிலும் பேசியது பற்றிய செய்திக் குறிப்பு ஒன்றில், ‘‘இந்த நீதிபதிகள் நியமனங்களில், நாட்டில் உள்ள பல்வேறுபட்ட பரவலான சமூக பன்முகத்தன்மையை மனதில் கொண்டு, (அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில்) நியமனங்கள் அமைவது அவசியம்‘’ என்ற கருத்தைக் கூறியுள்ளார்.
‘‘உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நிரப்பப் படவேண்டிய பதவிகளுக்குப் பரிந்துரைக்கையில், நாட்டில் உள்ள சமூக பன்முகத்தன்மையை அவை பிரதிபலிப்பதாகக் கொண்டு செய்வது உசிதம்‘’ என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
காலத்தின் கட்டாயமும், அரசியல் சட்டத்தின் நோக்கமும் ஆகும்! அதாவது அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையான முகப்புரையில் வலியுறுத்தப்படும் சமூகநீதிக்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற கருத்தை அழுத்தந்திருத்தமாக தலைமை நீதிபதி அவர்கள் வற்புறுத்தியிருப்பது காலத்தின் கட்டாயமாகும்; அரசியல் சட்டத்தின் நோக்கமும் ஆகும்.
மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கடிதம்!
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளை நிரப்பிடும்போது மத்திய அரசின் சட்டத் துறை அமைச்சகம் சமூகநீதிக்கு முன்னுரிமை தந்து, ஷெட்யூல்டு காஸ்ட், ஷெட்யூல்டு டிரைப், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள்(எஸ்சி.,எஸ்டி.,ஓ.பி.சி., மைனாரிட்டி, பெண்கள்) முதலியவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைத் தகுதியுள்ள பலரும் இருக்கும் நிலையில், கவனத்தில் எடுத்துக்கொண்டு, நியமனங்கள் செய்வது அவசியம் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் அவர்கள் எழுதிய கடிதத்திற்கு 15/01/2021 அன்று அவருக்கு எழுதியுள்ள பதில் கடிதத்திலும் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சமூகப் பன்முகத்தன்மையை உறுதி செய்திட...
‘‘உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூகப் பன்முகத்தன்மைக்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை அனுப்பும்போது, ஷெல்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகிய பிரிவினரில் தகுதியானவர்களும் இடம் பெற உரிய கவனம் செலுத்தி, சமூகப் பன்முகத்தன்மையை உறுதி செய்திட நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு வேண்டுகோளும் விடப்பட்டுள்ளது’’ என மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் தனது 15/01/2021 தேதியிட்ட பதில் கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இரு முக்கிய துறைகளும் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளன!
இந்த உறுதிமொழியின்படியும், தலைமை நீதிபதியின் கருத்துப்படியும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை சட்டத்துறையும், உச்சநீதிமன்றமும், இரு முக்கிய துறைகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளன.
உச்சநீதிமன்றத்தில் நடைமுறையில் கடந்த பல ஆண்டுகளாக எஸ்.டி., என்ற பழங்குடி சமூகத்தினைச் சார்ந்த நீதிபதிகளே கிடையாது.
அதுபோலவே பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்தும் நீதிபதியே இல்லை. எஸ்.சி.,யில் ஒரே ஒரு நீதிபதி கடந்த ஓராண்டில், ஒரே ஒருவர் இருக்கும் நிலை! இவை தவிர மற்ற அத்துணை பேரும் முன்னேறிய வகுப்பினர் என்ற நிலைதானே உள்ளது. இதை சரி செய்து கொடுத்த வாக்குறுதிப்படி இனி நிரப்பக் கூடிய ஏழு இடங்களில், வாய்ப்பு மறுக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மைனாரிட்டி, பெண்களுக்கான நியமனங்களைச் செய்வதுதானே உண்மையான சமூகநீதி வழங்குவதாகும்!
அதேபோல, 430 உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில், பல உயர்நீதிமன்றங்களும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மைனாரிட்டி, பெண்கள் நியமனம் போதுமான அளவில் (Adequate representation) இல்லாத நிலையை மாற்றி அமைக்கவேண்டியது நீதி பரிபாலனக் கண்ணோட்டத்திலும் சரி, சமூகநீதியை செயல்படுத்தும் வகையிலும் சரி, செய்யப்பட வேண்டியதல்லவா? மக்கள் பிரதிநிதிகள் சட்டங்களை இயற்றினாலும், இறுதி முடிவினை நீதிமன்றங்கள்தானே, குறிப்பாக உச்சநீதிமன்றம்தானே முடிவு செய்யும் நிலை உள்ளது!
சமூகப் பன்முகத்தன்மைக்கு வாய்ப்பளிப்பதன் மூலம்தானே...
அங்கே, Social Diversity - சமூகப் பன்முகத்தன்மைக்கு வாய்ப்பளிப்பதன் மூலம்தானே மக்களுக்கு மன நிறைவு தரக்கூடிய நீதி பரிபாலனம் அமைய வாய்ப்பு ஏற்படும். இதனை நாட்டில் சமூகநீதிக்குக் குரல் கொடுக்கும் அனைத்துக் கட்சியினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், முக்கிய பிரச்சினையாக எடுத்து உரிய முறையில் மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு சென்று, ஒரு தீர்வு கண்டு நீதித்துறையின் தேக்கத்தை பைசலாகாத வழக்குகளை பைசல் செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்த உடனடியாக முன்வரவேண்டியது அவசரம் அவசியம் ஆகும்!". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.