அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவின் உட்கியாஸ்விக் நகர மக்கள் இந்த ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தைப் புதன்கிழமை கண்டு ரசித்தனர்.
அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவின் உட்கியாஸ்விக் நகரம் வடதுருவத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும். இங்கு ஆண்டுதோறும் நவம்பர் 18 அல்லது 19 ஆம் தேதிகளில் மறையும் சூரியன், மீண்டும் அடுத்த ஜனவரி மாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் தான் உதயமாகும். அதுவரையிலான இரண்டு மாதங்கள் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் முழுமையாக இருளிலேயே வசிக்க வேண்டும். ஜனவரிக்குப் பிறகு சாதாரணமாக இருக்கும் சூரியனின் உதயமும் அஸ்தமனமும் மீண்டும் மே மாதத்தில் மாற்றம் அடையும். அதாவது, மே 11 அல்லது 12 ஆம் தேதிகளில் தொடங்கி, ஜூலை 31 அல்லது ஆகஸ்ட் 1 வரை சூரியன் சுமார் 80 நாட்களுக்கு அஸ்தமிக்காது.
இந்தக் காலகட்டத்தில் அங்கு அதிகபட்சமாக ஐந்து டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவும். மற்ற காலகட்டங்களில் இப்பகுதியில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழேயே காணப்படும். இப்படிப்பட்ட இப்பகுதியில் 2020 -ஆம் ஆண்டுக்கான கடைசி சூரிய அஸ்தமனம் புதன்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த அஸ்தமனத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் இனி ஜனவரி 22 அன்றுதான் சூரிய உதயம் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில், ஒரு நாளில் சில மணிநேரங்கள் மட்டும் லேசான சூரிய ஒளி இப்பகுதியில் காணப்பட்டாலும், அடுத்த ஜனவரி வரை இப்பகுதி மக்கள் சூரியனைக் காணமுடியாது என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.