ஊரடங்கு உத்தரவு 3 கட்டமாக நீட்டிப்பு செய்த நிலையில் அரசாங்கத்திற்கு வருமானம் வேண்டி சென்னையை தவிர தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அரசாங்கம் திறந்து விட்டது. குடிகாரர்களும் கடை திறந்தவுடன் வாங்குவதற்கு அதிகபட்சமாக 2 கிலோமீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று வாங்கினர்.
இவர்களை ஒழுங்குபடுத்துவதற்கு தமிழக காவல்துறை முழுநேரமாக டாஸ்மார்க் கடைகளை பாதுகாக்கும் பணியில் நியமிக்கப்பட்டனர். இந்த டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என்று எதிர்கட்சிகள் எல்லாம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். இதற்கு இடையில் திறந்த மதுக்கடைகளை மூட சொல்லி ஆங்காங்கே பெண்கள் கிளர்ந்து எழுந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
திருச்சியில் திருவானைக்கோவில் செக்போஸ்ட் அருகே உள்ள மதுக்கடையில் இன்று அந்த பகுதியில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு கடையை திறக்ககூடாது என்று போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.
வீட்டில் இருந்து அரிசிகளை எல்லாம் தரையில் கொட்டி கடையை திறக்க கூடாது என்று கோஷம் போட்டனர். ஒரு நாள் மதுக்கடையை திறந்து விட்டதுக்கே மதுவை குடித்து விட்டு வீட்டில் குப்பறபடுத்து கிடக்கிறார். வெறித்தனமாக சண்டை போடுகிறார். இது தொடர்ந்தால் எங்களோட தாலி அறுந்துவிடும் என்று அலற ஆரம்பித்தனர். மண்டல அதிகாரிகள் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு மாதத்திற்குள் இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவோம். அதுவரை அமைதியாக இருங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.
அதுவரை கடையை திறக்ககூடாது, இந்த மதுபாட்டில்கள் எல்லாம் வேறு இடத்தில் கொண்டு போய் வைத்துக்கொள்ளுங்கள், இந்த கடையை இனி திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று திரண்டு இருந்த பெண்கள் எல்லாம் சேர்ந்து புகார் மனு ஒன்றை தயார் படுத்தி போலிசிடம் கொடுத்தனர். கடைசியில் அதிகாரிகள் எல்லாம் பேச்சு வார்த்தை நடத்தி 1 மாதத்திற்குள் கடையை வேறு இடத்திற்கு மாற்றிவிடுகிறோம் என்கிற உத்தரவாதம் கொடுத்தவுடன் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.