கடலூர் அடுத்த தாழங்குடா பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் குண்டு உப்பலவாடியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராவார். இவர் தம்பி மதிவாணன் (36). கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாசிலாமணியின் மனைவி பிரவீனா, அதே பகுதியை சேர்ந்த மதியழகன் மனைவி சாந்தி ஆகியோர் போட்டியிட்டனர். சாந்தி வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக ஆனார். இந்த தேர்தல் காரணமாக இரு தரப்பினர் இடையேயும் முன்விரோதம் இருந்து வந்தது. அதையடுத்து கடந்த மாதம் மதிவாணன் கண்டக்காட்டிலிருந்து தாழங்குடா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் உருட்டுக்கட்டை, அரிவாள், இரும்பு கம்பி, கத்தி போன்ற ஆயுதங்களுடன் வழிமறித்தது. அதனால் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு மதிவாணன் தப்பி ஓடியபோது துரத்தி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
அதனைத்தொடர்ந்து மதிவாணன் ஆதரவாளர்கள் தாழங்குடா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள், வலைகுடோன்களுக்கு தீவைத்தனர். மேலும் வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட படகுகள், மீன்பிடி வலைகள், பத்துக்கும் மேற்பட்ட வீடுகள், மாருதி வேன், 5 இரு சக்கர வாகனங்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மதிவாணனின் அண்ணனுமான மாசிலாமணி அளித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் 15 பேரை கைது செய்தனர். அதேபோல் படகுகள், வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தங்கதுரை, வீரபாண்டியன், அரசகுமாரன், முகிலன், மதன், மதியழகன், வேலு சூர்யா, சிவசங்கர் இளவரசன் ஆகிய 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், புதுநகர் காவல் நிலைய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகாமூரிக்கு பரிந்துரை செய்தனர். அதையடுத்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் சகாமூரி உத்தரவிட்டதை தொடர்ந்து 10 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒரே கொலையில், ஒரே நாளில் 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது கடலூர் மாவட்டத்தில் பரபரப்பாகியுள்ளது.