'நிவர்' புயலானது தற்பொழுது கடலூரிலிருந்து 80 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்குத் திசையில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 14 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 85 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டரிலும் புயலானது நிலைகொண்டுள்ளது.
'நிவர்' புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால், ஆங்காங்கே நீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, 20 அடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. சென்னை சென்ட்ரல் நிலையம் எதிரே, ஏற்கனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் 'சப்-வே' அமைப்பதற்காகப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கனமழை காரணமாக, இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. திடீர் பள்ளத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.