
கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சையத். இவர் காரமடை பகுதியில் கிரில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இவர் வீட்டில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது சாண்ட்ரோ காரை நேற்றைய தினம் பெட்ரோல் நிரப்புவதற்காக தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு தனது நண்பர்கள் இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெள்ளாச்சி அருகே வி.வி.கார்டன் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து கருகும் வாடை வந்துள்ளது.
இந்நிலையில் சையத் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி பார்த்துள்ளார். காரிலிருந்து கரும்புகையுடன் இன்ஜினில் இருந்து தீ பற்றி உள்ளது. பின்னர் மளமளவென காரின் முன்பகுதியில் தீ பற்றி கார் எரியத் துவங்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் அருகிலிருந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் . மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு முன்னரே கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து காரமடை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.