சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்த நிலையில் 2015- ஆம் ஆண்டு ஜூன் 23- ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாகக் கிடந்த கோகுல்ராஜின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. குற்றவாளிகளைத் தண்டிக்காமல் உடலை வாங்கமாட்டோம் என மறுத்து, 2015 ஆம் ஆண்டு ஜூன் 25- ஆம் தேதி கோகுல்ராஜின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மரண வழக்கை விசாரிக்க திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 2015- ஆம் ஆண்டு செப்.15- ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை சம்பவம் தொடர்பாக பலகட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் கைது செய்யப்பட்ட 17 பேரில் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி இறந்துவிட்டனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 116 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த மாதம் பிப்.9 - ஆம் தேதி முடிந்த நிலையில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் கடந்த மார்ச் 5- ஆம் தேதி தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள். இந்த 10 பேருக்கான தண்டனை விபரம் வரும் மார்ச் 8- ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்துடன் இவ்வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று (08/03/2022) இவ்வழக்கின் தண்டனை விவரங்களை அறிவித்தார். அதன்படி,வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2வது குற்றவாளியான யுவராஜின் கார் ஓட்டுநர் அருணுக்கு ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 13வது குற்றவாளியான பிரபு, 14வது குற்றவாளியான கிரிதர் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளான குமார், சதீஸ்குமார், ஸ்ரீதர், ரஞ்சித், ரகு, செல்வராஜ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், இவ்வழக்கின் குற்றவாளிகள் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை, அனைவரும் சாகும் வரை சிறையில் அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது.
யுவராஜுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அறிந்த கோகுல்ராஜின் உறவினர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த கோகுல்ராஜின் தாய் சித்ரா, "என்னை போன்றவர்களுக்கு வந்த இதுபோன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது. கோகுல்ராஜ் வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என கோரினேன். விடுதலை செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க போராடிய அனைவருக்கும் நன்றி. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க போராடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு நன்றி. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. மகனை இழந்து ஒவ்வொரு நாளும் நான் பட்ட துயரம் வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன், "பட்டியலின இளைஞன் கொலை வழக்கில் நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு நியாயம் கிடைத்துள்ளது. சாதிய வன்மத்துடன் கோகுல்ராஜைக் கடத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அது கொலை என பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. ஒன்பது மணி நேரம் துன்புறுத்தப்பட்டு கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். கருணை மனு அளிக்கக் கூடாது என்ற வகையில் யுவராஜுக்கு ஆயுள் முழுக்க சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க என்னுடன் நின்று போராடிய அனைவருக்கும் நன்றி" என்றார்.
இதனிடையே, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு கிரீடம், மாலை அணிவித்து மரியாதைச் செய்தனர் கோகுல்ராஜின் உறவினர்கள்.