லலிதா ஜூவல்லரியில், தான் வாங்கிய நகையின் எடை அளவு குறைந்துள்ளதாக, ஒரு நபர் அந்தக் கடை பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்வதுபோன்ற வீடியோ, அண்மையில் வெளியாகியிருந்தது.
இதுதொடர்பாக லலிதா ஜூவல்லரி நிர்வாகத்திடம் பேசினோம். அதற்கு அவர்கள், "லலிதா ஜூவல்லரி 35 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள நிறுவனம். எங்கள் எல்லா நகைகளும் 'பி.ஐ.எஸ் 916' ஹால்மார்க் தங்கத்தினால் ஆனவை. தரத்திலோ, எடையிலோ குறையோ சமரசமோ இருந்தால் இத்தனை ஆண்டுகள் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க முடியுமா?
இது போட்டியாளர்களால் உள்நோக்கத்தோடு சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ. உண்மைக்குப் புறம்பானது. முழு வீடியோவை வெளியிடாமல் பாதியை மட்டும் வெளியிட்டு, குழப்பம் விளைவிக்க முற்பட்டுள்ளனர். எங்கள் எல்லா நகைகளுக்கும் முழு தரம் மற்றும் எடை உத்தரவாதத்தை தொடர்ந்து அளிப்போம்" என்றனர்.
மேலும், "இந்தச் சம்பவம் நடந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகிறது. அப்போதே, அந்த நபரிடம் முழு விளக்கத்தையும் அளித்துவிட்டோம். இந்நிலையில், தற்போது வீடியோ வெளியிடுவது போட்டியாளர்களின் உள்நோக்கம்தான்" எனவும் நிர்வாகத் தரப்பினர் தெரிவித்தனர்.