தமிழ்நாட்டில் இன்று (04.12.2021) ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 711 லிருந்து அதிகரித்து 731 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட அதிகம். இதில் 5 பேர் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வந்தவர்கள். இன்று ஒரேநாளில் தமிழ்நாட்டில் 1,06,505 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 136 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 128 என்றிருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் ஒரேநாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,510 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8,070 ஆக உள்ளது. இன்று ஒரேநாளில் 753 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26,85,203 பேர் குணமடைந்துள்ளனர். கோவை - 130, ஈரோடு - 57, செங்கல்பட்டு - 54, காஞ்சிபுரம் - 22, திருவள்ளூர் - 29, நாமக்கல் - 45, சேலம் - 39, திருச்சி - 25 , திருப்பூர் -50 பேர் என கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.