மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜாவடேகர், "பிரதமர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30% தொகை பிடித்தம் செய்யப்படும். 2020 - 21 மற்றும் 2021 - 22ம் ஆண்டுகளுக்கு எம்.பி.களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படாது. இந்த வகையில் மிச்சம்பிடிக்கப்படும் ரூ.7,900 கோடி பணம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
![su venkatesan Condemned BJP](http://image.nakkheeran.in/cdn/farfuture/eBxQzmTT99Bl6CsIoGcwgek9YGFUskVfPvz6yGxAa3k/1586208407/sites/default/files/inline-images/111111_249.jpg)
இதை கண்டித்து மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கரோனாவுக்கு எதிரான யுத்தம் மாநிலம், மாவட்டம், நகரம், கிராமம் என எல்லா மட்டங்களிலும் நடந்தேறி வரும் வேளையில் இன்றைய தேவை அதிகார பரவல். அதிகாரக் குவிப்பு அல்ல.
இரண்டு ஆண்டுகளுக்கு எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி இருக்காது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கரோனா ஒழிப்பு தேவைகளுக்காக எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை.
இவர்களின் தவறான பொருளாதாரப் பாதையால் ஏற்கெனவே சீர் குலைந்துள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கே. அரசுக்கு கரோனா ஒழிப்பிற்கு செலவிட வேண்டுமெனில் வருவாயை எங்கிருந்து திரட்டவேண்டும்? ஒரு சதவீதம் கார்ப்பரேட் வரிகளை உயர்த்தினாலே குறைந்த பட்சம் 50000 கோடி ரூபாய்கள் கிடைக்கும்.
கடந்த ஆண்டு தந்த கார்ப்பரேட் வரி சலுகைகளை தேசத்தின் நலனுக்காக திரும்பப் பெற்றால் 1,50, 000 கோடிகள் கிடைக்கும். ஆனால் அதற்கான அரசியல் உறுதியற்ற மத்திய அரசு, எம்.பி நிதியில் கைவைப்பது கரோனா ஒழிப்பிற்கு உதவாது. உள்ளூர் மட்ட முன் முயற்சிகளை விரைவான மக்கள் சேவையைத்தான் இது பாதிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.